Monday, August 11, 2014

கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்த மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்தும் பொருட்டு, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தேர்வு நடத்தப்படுகிறது.

கடலூர் மாவட்டம், கடலூர் மற்றும் விருத்தாசலம் என இரு கல்வி மாவட்டங்களை உள்ளடக்கியது. இரு கல்வி மாவட்டங்களிலும் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கற்றல் அடைவுத் திறன் குறைந்திருப்பது கடந்தாண்டு நடந்த மாநில அளவிலான கற்றல் அடைவுத் திறன் தேர்வில் தெரியவந்தது.
இதையடுத்து, அரசு பள்ளிகளில் கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளை கடலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மேற்கொண்டது. குறிப்பாக, கற்றல் அடைவுத் திறன் குறைந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு உள்ளிட்டப் பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது என்றும், இதன் மூலமாக அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் எளிதாக தேர்ச்சி பெறலாம் என்றும் முடிவு செய்தது.
அதன்படி, தமிழ், ஆங்கிலம், கணக்கு உள்ளிட்ட பாடங்களுக்கு தனித்தனியாக வினாத்தாள்கள் அச்சிட்டப்பட்டு, முதல் கட்டமாக 343 நடுநிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தேர்வு நடத்தப்பட்டது.
இரண்டாம் கட்டமாக, இந்த வாரத்திற்குள் 277 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வை நடத்தி முடிப்பதற்கான ஆயத்தப் பணிகளை அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அனைவருக்கும் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாணவ, மாணவிகளின் கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்தும் பொருட்டு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு முடிந்ததும் விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதில், தேர்ச்சி சதவீதம் குறையும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மீண்டும் தேர்வு நடத்தி, கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்" என்றார்.

No comments:

BRTES PUDUGAI