சே.சின்னத்துரை பா.காளிமுத்து
அந்தப் பள்ளிக்குள் சிங்கத்தின் கர்ஜனை, யானையின் பிளிறல், நரியின் ஊளை எனப் பல்வேறு சத்தங்கள் வந்தன. 'ஸ்கூலுக்குள்ளே ஜூ வந்துடுச்சா என்ன?’ என்ற தயக்கத்தோடு நுழைந்தால், விலங்குகள் மற்றும் காட்டுவாசிகள் வேடங்களில் மாணவர்கள் உலாவிக்கொண்டிருந்தார்கள். சிலருக்கு அப்போதுதான் பரபர மேக்கப் நடந்துகொண்டிருந்தது.
மாணவர்களுக்கு முகத்தில் மேக்கப் போட்டு, காட்டுவாசிகளாகவும் விலங்குகளாகவும்
மாற்றிக்கொண்டிருந்தவர், உயிரியல் ஆசிரியர் ரமணன். தமிழ் ஆசிரியர் முத்துக்குமார், ஆடை அலங்காரம் செய்தார். அவர்தான் இந்த நிகழ்ச்சிக்கான நாடகத்தை உருவாக்கியவராம். சிவா மற்றும் பாலா என்ற தமிழ் ஆசிரியர்களும் வேடமிட்டு வந்தனர்.
மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த 'கத கேளு... கத கேளு’ என்ற நிகழ்ச்சிக்கான கலாட்டாதான் அது.
''கதைகள் என்பது பொழுதுபோக்கு மட்டும் அல்ல, அதன் மூலம் நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாம். கற்பனைத்திறன், ஞாபகசக்தி, உச்சரிப்புத்திறன், கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் வளரும். நமது கலாசாரம், மொழி, பண்பாடு போன்ற பல முக்கிய விஷயங்களைக் கதைகள் மூலம் தெரிஞ்சுக்க முடியும். அதற்காகத்தான் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்துறோம். புகழ்பெற்ற பஞ்சதந்திரக் கதைகளை நாடகமாக நடத்தப்போறோம். வாங்க, காட்டுக்குள்ளே போகலாம்'' என்கிறார் முத்துக்குமார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன், தாளாளர் பார்த்தசாரதி, ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் உற்சாகமாகப் பின்தொடர, பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சி ஆரம்பித்தது.
காட்டுக்குள் வரும் ஒரு மனிதனை, காட்டுவாசிகள் சிறை பிடிக்கிறார்கள். அவனை சாப்பிடப்போவதாகச் சொல்கிறார்கள். ''ஐயையோ, என்னைக் கொன்னுடாதீங்க. நானே கதை சொல்லிப் பிழைச்சுக்கிட்டு இருக்கேன்'' என்று அழுகிறான் அந்த மனிதன்.
காட்டுவாசிகளின் தலைவன், ''நீ கதை சொல்பவனா? அப்படினா, நாங்க சந்தோஷப்படுற மாதிரி ஒரு கதை சொல். உன்னை விட்டுடுறோம்'' என்கிறான்.
கதைசொல்லி, கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறான். ''ஓர் அடர்ந்த காட்டில்...'' எனத் தொடங்கி, யானையைப் போல பிளிறுகிறான். சிங்கம் போல கர்ஜிக்கிறான். சாயம் வெளுத்த நரியின் கதையைச் சொல்கிறான்.
வேடமிட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் அந்தக் கதையை நாடகமாக அங்கே அரங்கேற்ற, சிரிப்பும், கைத்தட்டலுமாக அடர்ந்த காடு அதிர்கிறது. நரியின் நீல நிறச் சாயம் வெளுத்து, தப்பித்து ஓடுகிறது.
கதைசொல்லி, கதையை முடித்த பிறகு ஒரு ட்விஸ்ட். அந்தக் காட்டுவாசிகள், ''எங்களுக்குப் பசிக்கிறது. உன்னைச் சாப்பிடத்தான் போறோம்'' என்று சொல்ல, மறுபடியும் ஒரு கதையைச் சொல்கிறான்.
இந்த முறை, அட்டகாசம் செய்யும் சிங்கத்தை, முயல் ஒன்று தந்திரமாக கிணற்றில் தள்ளுகிற கதையைச் சொல்கிறார். மாணவர்கள் மறுபடியும் கதாபாத்திரங்களாக மாறுகிறார்கள். கடைசியில், 'அடுத்தவர்களைத் துன்புறுத்துவது பாவம். ஒருநாள் அது நமக்கே துன்பமாக முடியும்’ என்று முடிக்கிறார் கதைசொல்லி.
காட்டுவாசிகள் அழுதுகொண்டே, ''இனிமேல் நாங்கள் யாரையும் துன்புறுத்த மாட்டோம்'' என்று சொல்லி, கதைசொல்லியைப் பத்திரமாக அனுப்பிவைக்கிறார்கள்.
''மாணவர்களில் பலரிடம் கற்கும் திறனில் சில குறைபாடுகள் இருந்தன. ஆசிரியர்களிடம் பேசுவதில் பயம், சக மாணவர்களிடம் பேசவே தயக்கம் எனப் பல விஷயங்கள். இதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தபோது தோன்றியதுதான் இந்த யோசனை. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் ஆசிரியர், மாணவர்கள் இடையே நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்ததைவிட அதிகமாக வரவேற்பும் உற்சாகமும் மாணவர்களிடம் கிடைச்சிருக்கு'' என்றார் ஆசிரியர் சிவா.
''ரொம்ப ரொம்ப ஜாலியா இருந்துச்சு. இன்னொரு முறை காட்டுக்குள்ளே போக ஆசையா இருக்கு'' என்ற முயலை, ஒரு புலி முதுகில் தட்டிவிட்டு ஓட, அந்தப் புலியை விரட்டிச்சென்றது முயல் .
No comments:
Post a Comment