Saturday, August 16, 2014

சென்னையில் மூடப்படும் நிலைக்கு வந்துள்ள 8 மாநகராட்சி பள்ளிகள்

மாணவர் சேர்க்கை குறைவால், சென்னையில் எட்டு மாநகராட்சி பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு வந்துள்ளன. இந்த பள்ளிகளை தனியார் மூலம் பராமரிக்க திட்டமிடப்பட்ட நிலையில், அதிலும் தற்போது குழப்பம் நிலவுவதாக தெரிகிறது.



சென்னை மாநகராட்சி பராமரிப்பில், பல்வேறு நிலைகளில், 284 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 88 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை மாநகராட்சி பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.
100க்கும் குறைவான...

இதற்கு, சென்னையில் தனியார் பள்ளிகள் ஆதிக்கம் அதிகரிப்பு, குடிசை பகுதிகளை காலி செய்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கி வருவது ஆகிய காரணங்கள் கூறப்படுகின்றன. மாணவர் சேர்க்கை இல்லாததால், பல மாநகராட்சி பள்ளிகள் 100க்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட மாணவர்களுடன் இயங்கி வருகின்றன. இதில், எட்டு பள்ளிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

இந்த பள்ளிகளில், 8ம் வகுப்பு வரை சேர்த்து, மொத்தம் 20 முதல் 30 மாணவர்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பள்ளிகள் சேத்துப்பட்டு, சிவராஜபுரம், சாந்தோம், திருவல்லிக்கேணி, ராயபுரம் ஆகிய பகுதிகளில் இருப்பதாக கூறப்படுகிறது.

வாக்குறுதி என்னாச்சு?

இவ்வளவு குறைந்த மாணவர்களை கொண்டு, ஒரு பள்ளியை நடத்த முடியாது என்பதால், இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தனியாரிடம் பள்ளியை ஒப்படைக்கலாமா என்று மாநகராட்சி ஆலோசித்தது. இதற்காக சில தனியார் கல்வி அமைப்புகள், பள்ளியை தத்தெடுத்து நடத்த முன்வந்தன.

ஆனால், மாநகராட்சி விதித்த நிபந்தனைகள், தனியார் நிறுவனங்கள் கோரும் தொகை உட்பட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்தபோது, தனியார் மூலம் பள்ளிகளை நடத்தும் திட்டத்திலும் குழப்பம் ஏற்பட்டதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், குறைவான மாணவர்கள் படிக்கும், அந்த எட்டு மாநகராட்சி பள்ளிகளையும், ஒருவேளை மூட வேண்டிய நிலையும் ஏற்படலாம் என, அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த மாணவர்கள், அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. கடந்த தி.மு.க., ஆட்சியில், 30க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகள் மூடப்பட்டன. தற்போதைய மேயர் சைதை துரைசாமி, எந்த மாநகராட்சி பள்ளியும் இனி மூடப்படாது; பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.

கண்காணிப்பு இல்லை: இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்வரை, மாநகராட்சி ஆசிரியர்கள், குடிசை பகுதிகளுக்கு சென்று குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருவர். ஆனால், தற்போது அதுபோன்று ஆசிரியர்கள் களத்திற்கு செல்வதில்லை. கல்வித்துறை அதிகாரிகளும் கண்காணிப்பதில்லை. இதுவும் மாணவர் சேர்க்கை குறைவுக்கு ஒரு காரணம் என்று விவரம் அறிந்த தலைமை ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

No comments:

BRTES PUDUGAI