''நம்ம தமிழ்நாட்டின் கலைகள், வீர விளையாட்டுகளை ஒவ்வொருத்தரும் தெரிஞ்சுக்கணும், அதில் ஈடுபடணும். அதைத்தான் நான் செய்யறேன். இதை சாதனை என்று சொல்றதைவிட, கடமை என்று சொல்றதுதான் சரி'' - தன்னடக்கத்துடன் பேசுகிறார் ஹர்சினி.
ஈரோடு, கார்மல் மெட்ரிகுலேஷன் பள்ளியின் ஏழாம் வகுப்பு
மாணவியான ஹர்சினி, தமிழரின் பாரம்பரியக் கலைகளான சிலம்பம், ஒயிலாட்டம்,
கோலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம் எல்லாவற்றிலும் கலக்குகிறார்.
ஹர்சினியின் தந்தை கதிர்வேல், சாக்கு வியாபாரம்
செய்பவர். 'வியாபார விஷயமாக, ஏழு வருடங்களுக்கு முன்பு கருங்கல்பாளையம்,
கலைத்தாய் அறக்கட்டளை அலுவலகத்துக்கு போயிருந்தேன். அங்கே, சிறியவர்கள்
முதல் பெரியவர்கள் வரை சிலம்பப் பயிற்சியில் இருந்தாங்க. 'ஆர்வம் உள்ள
யாரும் வரலாம். இங்கே யாரிடமும் கட்டணம் வசூலிப்பது
இல்லை’என்றார்கள். ஹர்சினியையும் அதில் சேர்த்துவிட்டேன்'' என்கிறார்.
கலைத்தாய் அறக்கட்டளையின் நிறுவனர் மாதேஸ்வரன், 'நம்
மக்கள் அனைத்திலும் மேற்கத்திய கலாச்சார முறைகளையே விரும்புறாங்க.
பாதுகாப்புக் கலைகளில்கூட கராத்தே, குங்ஃபூ போன்றவற்றுக்கே முக்கியத்துவம்
தர்றாங்க. நான் குங்ஃபூவிலும் ப்ளாக் பெல்ட் வாங்கியவன்தான். ஆனால், நம்
முன்னோர்கள் சொல்லித்தந்த பாதுகாப்புக் கலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு கலையும் ஒரு காரணம் கருதி வடிவமைக்கப்பட்டது. போர்க்கலைகளுக்கு
சிலம்பம், விவசாய வேலைகளுக்கு மாற்று உடற்பயிற்சியாக ஒயிலாட்டம் என
இருந்தது. கோலாட்டமும் தப்பாட்டமும் நம் உடல் தசைகளை வலுப்படுத்தியது''
என்கிறார்.
டிராக்டர் மெக்கானிக்காக இருக்கும் மாதேஸ்வரன், 25
ஆண்டுகளாக கலைத்தாய் அறக்கட்டளை மூலம் நிறைய மாணவர்களுக்கு பயிற்சி
அளித்துவருகிறார். இதற்காக கட்டணம் ஏதும் இல்லை. முற்றிலும் இலவசம்.
''என் தந்தை கற்றுக்கொடுத்த கலையை, நான் அடுத்த
தலைமுறைக்குக் கொடுக்கிறேன். ஹர்சினி, தமிழ்நாடு அளவிலான போட்டிகளில்
வெற்றி பெற்றிருக்கிறார். சர்வதேசப் போட்டிகளுக்கு இப்போது
தயாராகிவருகிறார்' என்றார் பெருமிதமாக.
'சிலம்பத்தில் போர் முறை, விளையாட்டு, சிலம்பச் சண்டை
மூன்றையும் நான் கற்றுள்ளேன். அலங்கார இரட்டைச் சிலம்பம், வாள்வீச்சு,
ரிப்பன் கத்தி சுழற்றுதல், தண்ணீர்த்தட்டு சுற்றுதல் போன்றவையும் தெரியும்.
உங்களுக்கு அறுவடை ஒயில் பற்றித் தெரியுமா? ஒயிலாட்டத்தில், அது ஒரு வகை.
அதை ஆடுவது ரொம்பப் பிடிக்கும். தப்பாட்டம், கோலாட்டம், அதோடு கரகாட்டமும்
தெரியும்'' என்று அடுக்கிக்கொண்டே செல்லும் ஹர்சினி, ஒவ்வொன்றாக ஆடி
அசத்தினார்.
திரையில் காட்சிகள் மாறுவது போல, சிலம்புக்கு அடுத்து
கோலாட்டம், ஒயிலாட்டம், வாள்வீச்சு, கரகாட்டம் என நொடிகளில் தன்னைத்
தயார்ப்படுத்திக்கொண்டு பின்னி எடுக்கிறார் ஹர்சினி.
''இவை எல்லாமே உடல், மனம் சம்பந்தப்பட்ட விளையாட்டுகள்
என்பதால், என்னால் எப்பவும் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க
முடியுது. படிப்பில் கவனம் செலுத்தவும் முடியுது. நாட்டுப்புறக் கலைகள்
குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த, முகாம்களில் கலந்துகொண்டு பிரச்சாரம்
செய்றேன். யுவ கேந்திரா, தமிழ்நாடு அரசின் பரிசு எனப் பல்வேறு விருதுகளை
வாங்கியிருக்கேன். என்னைப் பார்த்து என் பள்ளி நண்பர்களும் கத்துக்க
முன்வந்திருக்காங்க. நான் வாங்கிய பரிசுகளைவிட, இதுதான் ரொம்ப சந்தோஷமா
இருக்கு. இந்த மாதிரி இன்னும் பலர் முன்வரணும். சர்வதேசப் போட்டிகளில்
பங்கெடுத்து, தமிழர் கலைகளை உலகம் அறியச் செய்யணும். அதை நாங்க நிச்சயம்
செய்வோம்'' என்கிற ஹர்சினியின் குரலில் மிளிர்கிறது நம்பிக்கை
No comments:
Post a Comment