மனிதர்களுக்கு நோய் உண்டாகி, உடலைப் பாதிப்பது போலவே, தாவரங்களையும் நோய்கள் தாக்குகின்றன.அதனால், பொருளாதாரரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. பாக்டீரியா, பூஞ்சைகள், வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளால் தாவரங்களில் தோன்றும் பலவித நோய்கள் குறித்து வேளாண்மைத் துறை அலுவலர் ஒருவரை பள்ளிக்கு வரவழைத்து, மாணவர்கள் ஆர்வத்துடன் சேகரித்த தகவல்கள் இவை.
எள் செடியில் தோன்றும் வேர் அழுகல் நோய் (மேக்ரோஃபோமினா ஃபாசியோலினா): இந்த நோய் ஏற்படுத்தும் பூஞ்சான், நாற்றுச் செடிகளைத் தாக்கும். தண்டுவடம் அழுகி, நாற்று சாய்தலை ஏற்படுத்தும். முற்றிய செடிகளில் கருமை அல்லது பழுப்பு நிறத் தேமல் ஏற்படும்.
மா மரத்தில் ஏற்படும் ஆந்தராக்நோஸ் (கொல்லடோடிரைக்கம் கிலியோஸ்போரிடிஸ்): இலைப் புள்ளிகள் உருவாக்குவது, பூவைக் கருக்குதல், நுனி வாடுதல், கிளைகளைக் கருக்குதல் மற்றும் பழங்களை அழுகச் செய்தல். இலை மற்றும் சிறு கிளைகளில் கொப்புளம் போன்ற புள்ளிகள் தோன்றும். இளம் இலைகள் வாடிக் காய்ந்துவிடும். இளம் கிளைகள் வாடி, பின்நோக்கிக் காயும். முடிவில், நோய்த் தாக்கப்பட்ட கிளைகள் காய்ந்துவிடும். கருப்புப் புள்ளிகள் பழங்களில் தோன்றும். பழத்தின் சதைப்பாங்கான பாகத்தில், கடினமான வெடிப்புகள் இருக்கும். பழுக்கும் நேரத்தில் அழுகிவிடும். பாதிக்கப்பட்ட பழங்கள் உதிர்ந்துவிடும்.
பயிர் நோய்களுக்கு என்ன மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்துகொண்டனர். இதுபோல, வேளாண் அதிகாரி அல்லது மூத்த விவசாயிகளைச் சந்தித்துப் பேசி, வேறு பல காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் ஏற்படும் நோய்கள் பற்றி மாணவர்கள் தெரிந்துகொண்டதைப் பட்டியல் இடச்செய்து, மதிப்பிடலாம்.
பங்கேற்பு: ஊ.ஒ.ந.நி.பள்ளி, கொடிஹல்லி.
- த.சிங்காரவேலன், தருமபுரி.
- த.சிங்காரவேலன், தருமபுரி.
No comments:
Post a Comment