Saturday, August 16, 2014

மொழியுணர்வை வளர்ப்போம்.

 "மொழி" மனித இனத்திற்கு மட்டுமே உரித்தான, பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட, பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட, அவ்வபோது மாற்றத்திற்கு உட்படும் மனித உணர்வுகளை,உணர்ச்சிகளை,சிந்தனையை வெளிப்படுத்தும் ஒரு கருவி.


ஒரு மாணவன் நன்றாக படிக்கிறான்  என்றால் அவன் நிச்சயம் அவன் தன் தாய் மொழியில் சிறப்பான அறிவை பெற்றிருக்கிறான் என்று பொருள்.

உதாரணமாக அறிவியலில் மின்னூட்டம்,மின்னோட்டம் என்பனவற்றின் வரையறைகளை படிக்கும் போது தாய் மொழியறிவு  மிகுந்த மாணவன்  மின்னூட்டம்=மின்+ஊட்டம், மின்னோட்டம்=மின்+ஓட்டம் எனப் பிரித்துப் படித்து மிக எளிதாக புரிந்து கொள்வான்.ஆனால் மொழியறிவு குறைந்த ஒருவன் "மின்னூட்டம் என்றால் என்ன?"  என்ற கேள்விக்கு மின்னோட்டத்திற்கான பதிலை எழுதுவான்.

தாய் மொழியறிவில் சிறந்திருந்தால்  மட்டுமே நல்ல கவிஞாகவும், அறிவியலறிஞகவும் மற்றும் நல்ல சிந்தனையாளாராகவும் திகழ முடியும்.

இந்த உலகத்தில் இதுவரை பிறந்த அறிவாளிகளிலேயே மிகச் சிறந்த அறிவாளி யார்  என்று தேடும் பொழுது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அகப்படுகிறார்.அவருக்கு மிகச்சிறந்த மொழியறிவு இருந்திருக்கக் கூடும்.அதனால்தான் தன் கற்பனையாலே பிரபஞ்ச ரகசியங்கள் பலவற்றை வெளிக் கொணர்ந்தார்.கார்ல் மார்க்ஸின் சிந்தனை வளார்ந்ததும் மொழியறிவு வளர்ச்சியின் உட்சத்தின் வெளிப்பாடுதான்.

சுதந்திர தினமாகிய இன்று  வெறுமனே வழக்கம் போல்  சுதந்திர தினப் போராட்ட வீரர்களை நினைவூட்டினால் போதாது.அவர்களின் உண்மையான வீரத்தை,தியாகத்தை மாணவர்களுக்குக் கொண்டு செல்ல, மாணவர்கள் புரிந்து கொள்ள அவர்களுக்கு தாய் மொழியின் முக்கியதுவத்தை உணர்த்த முயற்சி செய்ய வேண்டும்.

"தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில்  
இந்த ஜகத்தினை அழித்திடுவோம் "

என்று பாரதியார் பாடியிருப்பார்.இந்த வரிகள் மொழியறிவு மிகுந்த ஒருவன் படிக்கும் பொழுது மனதில் ஒரு எழிச்சி ஏற்படும்,பாரதியின் மீது காதல் ஏற்படும்.அவனது மனதில் இந்த வரிகள்  என்றும் நிலையாக நின்று போகும்.மொழியறிவு குறைந்த ஒருவன் படிக்கும் பொழுது அதை மனனம் செய்துகொண்டிருப்பான்.

அண்மையில் "சுதந்திர போராட்ட வீரர்களிலேயே உங்களிடம் அதிக தாக்கத்தை உண்டு பண்ணியவர் யார்?"  என்ற கேள்வி இணையதளம் ஒன்றின் மூலம் கேட்கப் பட்டது.அதில் காந்தி,நேரு,நேதாஜி,பகத்சிங் போன்றோரின் பெயர் இடம்பெற்றிருந்தது.சுதந்திர யுத்தத்தில் அவர்கள் அணைவரும் வெற்றி பெற்றாலும் இந்த யுத்தத்தின் இறுதியில் யார் வென்றது தெரியுமா? பகத் சிங்.

சுதந்திரத்திற்காக விரல்விட்டு எண்ணுமளவிலே அவனது செயல்பாடுகள் இருந்திருக்கலாம்.ஆனால் அந்த ஒரு சில செயல்பாடும் மிக வீரமானதாக இருந்ததே இணையதளத்தில் இப்போது வென்றிருப்பதற்கு  காரணம்.

                                                            


 சேலத்திலிருந்து  சென்னை செல்ல பணமில்லாத காரணத்தினால் கழிவறையில் பதுங்கி சென்ற, சென்னையில் வயிற்றுப் பசிக்காக "watchman" எனப்படும் காவலாளியாக வேலை பார்த்த திரு கருணாநிதி அவர்கள் நம் தமிழகத்தை  5 முறை  ஆண்டிருக்கிறார் என்றால் அவருக்கிருந்த,அவருக்கிருகின்ற முதன்மையான தகுதி மொழியறிவு மட்டுமே.

வள்ளுவனும் கம்பனும் இளங்கோவனும்  இன்று நம் தமிழ்ச் சமுதாயத்தில் மிகப் பெரிய அளவில் கொலோச்சிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் பல்துறை அறிவு பெற்றவர்கள் என்பதால் மட்டுமல்ல,அதை மிக உயர்ந்த தரத்தில் வெளிப் படுத்தியதே காரணம்.காதல்,காமம்,நீதி,அராசாட்சி,ஒழுக்கம் என இவர்கள் எந்த துறையையும் ஒதுக்கவில்லை.அவர்கள் அந்த துறை சார்ந்த அறிவை பெற்றிருந்ததோடு தனக்குத் தெரிந்ததை கொஞ்சம் கூட பிசறாமல் பிழையில்லாமல் தன் எழுத்தின் மூலம் வெளிப்படுத்தக் கூடிய மொழியறிவை பெற்றிருந்தார்கள் என்பதே உண்மை.

"தமிழுக்கு அமுதென்று பேர்  
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் 
உயிருக்கு நேர் உயிருக்கு நேர்!"

"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் 
மங்காத தமிழென்று சங்கே முழங்கு...."

-பாரதிதாசன் 

உலகில் வேறெந்த மொழியிலும் அமிழ்தம் என்பதற்கு இணையான  சொல்லோ அல்லது அமிழ்தம் என்று பொருள் படும் வகையில் சொல்லோ  இருப்பதாக தெரியவில்லை.ஆனால் உலகிலேயே அமிழ்தம் என்று  ஒரு பொருள் இருக்கிறது,அதை உண்டால் மரணமே ஏற்படாது என்றும்,அந்த அமிழ்தத்திற்கு இணையான மொழி எங்கள் தமிழ் மொழி என்றும் உருவாகப் படுத்தி பெருமையடைந்த மொழி நம் தமிழ் மொழியாகத்தான் இருக்கும். அதாவது அமிழ்தத்தை உண்டால் எப்படி மரணமேற்படாதோ அப்படியே  தமிழை கற்றவனுக்கும் மரணமேற்படாது என்றார் பாரதிதாசன்.

இங்கு "கற்றவன்" என்பதற்கு "தமிழ்ப்புலவன்" என்று பொருள். உண்மைதானே! கம்பனும் வள்ளுவனும்,பாரதியும் செத்ததுண்டா? இந்த உலகம் அழியும் வரையில், தமிழ் தன்னுடைய இறுதி மூச்சை இழக்கும் வரையில் அவர்களும்  வாழ்வார்கள்.

அதனால் உண்மையான சுதந்திர தினத்தை  கொண்டாட வேண்டுமென்றால்,சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை கொஞ்சம் கூட சிதறாமல் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டுமென்றால் அவர்களுக்கு முதலில் மொழியின் முக்கியதுவத்தை உணர்த்த வேண்டும்.

அவர்கள் மொழியின் இன்பத்தை சுவைக்கக் கற்றுக் கொண்டால் பிறர் துணையின்றி தானாகவே வீரியம் மிக்கவர்களாக மாறுவார்கள. அதுவே உண்மையான சுந்திர தினத்தை கொண்டாடுவதாகவும்,சுதந்திர நாட்டில் சுதந்திரமாக செயல்படவும் வழிவகுக்கும்.

சுதந்திர தினமாகிய இன்று  தலைப்பில் "சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்" என்ற வாக்கியம்  இடம் பெறுவதற்கு பதில் "மொழியுணர்வை வளர்ப்போம்." என்ற வாக்கியம் இடம் பெற்றிருறுப்பதற்கு இதுதான் காரணம்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

No comments:

BRTES PUDUGAI