''முயற்சி இருந்தால், தடைகள் என்ற ஒரு வார்த்தையே நம் அகராதியில் இருக்காது'' என்று புன்னகையுடன் சொல்லும் முகிலன் சாதித்தது, பலரின் கனவாக இருக்கும் ஒன்று.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகமும் மேக்மில்லன் பதிப்பகமும் இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு வருடந்தோறும் திறனாய்வுத் தேர்வுகளை நடத்திவருகின்றன. சார்க் நாடுகள் மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக பல்வேறு கட்டங்களில் நடைபெறும் போட்டி இது. இதில், முதல் இடத்தைப் பெறும் மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும்.
இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், சவுதி அரேபியா உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில், தங்கப் பதக்கம் பெற்றிருக்கும் முகிலன், வேலூர் ஐடா ஸ்கடர் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார்.
''நான் 6-ம் வகுப்பு படிக்கும்போது முதன்முதலாக இந்தத் தேர்வில் கலந்துகொண்டேன். அதில், அறிவியல் தேர்வில் மாநிலத்தில் முதலாவதாக வந்தேன். 9-ம் வகுப்பு படிக்கும்போது எழுதிய தேர்வில், ஆங்கிலத்தில் மாநிலத்தில் முதலாவதாக வந்தேன். சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றேன்'' என்கிறார் மகிழ்ச்சியோடு.
அறிவியல், ஆங்கிலம், கணக்கு, கணினி அறிவியல் என்று நான்கு பிரிவுகளாக நடத்தப்படும் இந்தத் தேர்வில், பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு பிரிவுகளில்தான் கலந்துகொள்வார்கள். முகிலனோ, நான்கு பிரிவுகளிலும் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார்.
''இந்தத் தேர்வுக்கு கைடு எல்லாம் கிடையாது. பாடங்களில் இருந்து கேட்க மாட்டார்கள். அறிவியல் தேர்வு என்றால், அதில் கண்டுபிடிக்கப்பட்ட விதியைக் கூறி, அதன் விளைவுகளை சாய்ஸாகக் கொடுத்து, தேர்வு செய்யச் சொல்வார்கள். இப்படி ஒவ்வொன்றிலும் மூளைக்கு கடுமையான வேலை இருக்கும்'' என்கிறார்.
தனது வெற்றிக்கு பெற்றோர்கள் ஒரு இறக்கையாகவும், பள்ளித் தாளாளர் ரெனித்தா முத்துசாமி மற்றொரு இறக்கையாகவும் இருந்ததாகக் கூறும் முகிலனின் தங்கப் பயணம் தொடரட்டும்!
No comments:
Post a Comment